நிலக்கோட்டையில் சமூக விரோதிகளின் கூடாரமான போலீஸ் குடியிருப்பு

நிலக்கோட்டையில் சமூக விரோதிகளின் கூடாரமான போலீஸ் குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-04 17:22 GMT

நிலக்கோட்டை புதுத்தெருவில் பழைய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தற்போது யாரும் இல்லை. அங்குள்ள வீடுகள் சேதமடைந்து பாழடைந்து காணப்படுகின்றன. இந்தநிலையில் பழைய போலீஸ் குடியிருப்பில் மர்மநபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திருடர்கள் வாகனங்கள் மற்றும் பொருட்களை திருடி, இந்த போலீஸ் குடியிருப்பில் பதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிலக்கோட்டை மின்வாரிய காலனி, ஆனந்தன் நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்மநபர்கள் வீடுகளின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பின்னர் அவற்றை காவலர் குடியிருப்பில் பதுக்கி வைத்து, அவற்றை வெளியூருக்கு கொண்டு சென்று விற்றுவிடுகின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தாலும், புகார் தெரிவித்த ஓரிரு நாட்களில் மட்டும் கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. அதன்பிறகு பழைய குருடி கதவை திறடி என்பது போல் மீண்டும் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது.

எனவே பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தவிர்க்க பழைய போலீஸ் குடியிருப்பு பகுதியை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்