கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை

மஞ்சூர் அருகே குடிநீர் தொட்டியில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-03 20:00 GMT

ஊட்டி

மஞ்சூர் அருகே குடிநீர் தொட்டியில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எடக்காடு பாதகண்டியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி கல்யாணி. இவர்களுக்கு பவித்ரா, விசித்ரா (வயது 23) என 2 மகள்கள் உள்ளனர். பவித்ரா திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். விசித்ரா பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இதையடுத்து அவருக்கு பெற்றோர் திருமண வரன் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி விசித்ராவை வீட்டில் காணவில்லை. இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே பாதகண்டியில் உள்ள கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் பொது குடிநீர் தொட்டியில் விசித்ரா பிணமாக மிதந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதை பார்த்த குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாரா?, குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்து யாராவது உடலை தொட்டியில் வீசி உள்ளார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் விசித்ரா சாவு வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், விசித்ரா கழுத்தில் காயம் இருக்கும் அடையாளம் உள்ளது. இதனால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம். குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தாலோ அல்லது குதித்து தற்கொலை செய்து கொண்டாலோ கழுத்தில் காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. திருமண வரன் பார்த்து வந்த நிலையில், இதற்கு முன்பு இளம்பெண்ணுடன் பழகியவர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்