அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.1¼ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்
பெரம்பலூரில் நள்ளிரவில் அரசு பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
தவறவிட்ட கைபை
சிவகங்கை மாவட்டம், சாத்தனி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 67). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிவகங்கையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக ஒரு அரசு பஸ்சில் பயணம் செய்துகொண்டிருந்தார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அந்த பஸ்சில் கை பையை வைத்துவிட்டு கீழே இறங்கியுள்ளார். அங்கு சிறுநீர் கழித்துவிட்டுவந்து பார்த்தபோது அந்த பஸ் கிளம்பி சென்றுவிட்டது. அவர் தனது கை பையை பஸ்சிலேயே தவறவிட்டுவிட்டதையும், அதில் ரொக்க பணம் வைத்துள்ளதாகவும், தனக்கு உதவிடும்படி அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியிடம் பஸ்சின் பயணசீட்டை காண்பித்து கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, பயணசீட்டை பார்த்து அதில் இருந்த பஸ்சின் எண்ணை கூறி, இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், உடனே திருமாந்துறை டோல்பிளாசாவிற்கு விரைந்தார்.
உரியவரிடம் ஒப்படைப்பு
அங்கு வந்த அரசு பஸ்சை நிறுத்தி, பயணி தவறவிட்ட பையின் அடையாளத்தை கூறி அதனை பெற்றுக்கொண்டார். பின்பு ராஜமாணிக்கத்தை திருமாந்துறை சுங்கசாவடிக்கு அடுத்த அரசு பஸ்சில் வரவழைத்து, அவரிடம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட ராஜமாணிக்கம், போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். பின்பு அதே பயண டிக்கெட்டை வைத்து வெறொரு அரசு பஸ்சில் சென்னைக்கு செல்ல போலீசார் உதவி செய்தனர். இந்த நிகழ்வில் அரசு விரைவு பஸ்சில் கொடுத்த இ-டிக்கெட்டில் பஸ்சின் பதிவு எண் இருந்ததால், துரித நேரத்தில் செயல்பட்டு, ரொக்கபணத்தை மீட்க முடிந்தது. அரசு சாதாரண பஸ்சில் கொடுக்கப்படும் பயண டிக்கெட்டில், பஸ்சின் பதிவு எண் இருக்காது என்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தெரிவித்தார். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் அரசு பஸ்சில் பயணி தவறவிட்ட பணத்தை உடனே மீட்க நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.