குறுவை நெற்பயிர்களை கால்நடைகளை விட்டு மேயவிடும் அவலம்
கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி கருகிய குறுவை நெற்பயிர்களை கால்நடைகளை விட்டு மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி கருகிய குறுவை நெற்பயிர்களை கால்நடைகளை விட்டு மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலபனையூர் ஊராட்சி கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும், இதுவரை இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை வயல்களுக்கு கொண்டு வந்து, அவற்றை நெற்பயிர்களை மேயவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பாசன வசதி
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- கமலாபுரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்கள் அய்யனாற்றில் இருந்து பிரிந்து கூழையாறில் வரும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கூழையாறு தூர்வாரப்படாததாலும் போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடாததாலும் கமலாபுரம் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
நிலத்தடி நீரும் உறிஞ்சப்படுவதால் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் உப்பு தன்மை ஏற்பட்டு விட்டது. இந்த தண்ணீர் மூலம் சாகுபடி செய்தால் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி விடுகின்றன.
எட்டாக்கனியாக உள்ளது
கமலாபுரம் கிராமத்தில் உள்ள அய்யனார் குளம், திருவாசல்குளம், மாரியம்மன் குளம், வண்ணான் குட்டை, வாட்டர்கண்ணி குளம், நரிக்குட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்படவில்லை.
மேலும் இந்த குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் கூழையாறில் இருந்து வரும் தண்ணீர் பொண்ணு கொண்டான் வடிகாலில் சென்று விடுகின்றன. எங்கள் பகுதி விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி பல ஆண்டுகளாக எட்டாக்கனியாகி உள்ளது.
கால்நடைகளை மேயவிடும் அவலம்
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் எங்கள் கிராமத்திற்கு காலத்தோடு தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் குறுவை சாகுபடியை தொடங்கினோம்.
ஆனால் தண்ணீர் இன்றி பயிர்களை மேயவிட்டு கால்நடைகளுக்கு உணவாக்கும் அவலநிலை ஏற்படும் என நினைத்து கூட பார்க்கவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிவாரணம் வழங்க வேண்டும்
தொடர்ந்து பல ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாததால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.