பழம்பெருமை வாய்ந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதான அவலம்

ஆரணியில் பழம்பெருமை வாய்ந்த வெங்கட்ராமன் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதோடு புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் அங்கு செல்ல தயங்கும் நிலை உள்ளது.

Update: 2022-10-30 16:22 GMT

ஆரணி

ஆரணியில் பழம்பெருமை வாய்ந்த வெங்கட்ராமன் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளதோடு புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் அங்கு செல்ல தயங்கும் நிலை உள்ளது.

பொழுதுபோக்கு பூங்கா

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வருவாய் மிக்க நகராட்சியாக திகழ்வது ஆரணி நகராட்சியாகும். ஆரணியின் பெயருக்கு பெருமை சேர்க்கக்கூடிய பட்டு உற்பத்தி, அரிசி உற்பத்தி ஆகிய 2 தொழில்கள் சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆரணியில் தொடங்கி விட்டது.

இந்த 2 தொழிலையும் நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் ஆரணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ளன.

அவர்களது பொழுதுபோக்கிற்காக ஆரணி நகரில் இடம் இல்லாத குறை இருந்து வந்தது.

அதனை போக்கும் விதமாக ஆரணி நகரில் 1936- ம் ஆண்டில் ஜாகிர்தார்கள் ஆட்சி காலத்திலேயே இங்கு பூங்கா தொடங்கப்பட்டு, அதற்கு வெங்கட்ராமன் பூங்கா என பெயரிடப்பட்டது.

சிறுவர்கள் விளையாடுவதற்கும் பொழுது போக்குவதற்கும் பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயன்படுத்த முடியாத நிலை

இந்த பூங்கா நகராட்சியின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக 3 பாதுகாப்பு பணியாளர்கள் நகராட்சி மூலம் நியமிக்கப்பட்டனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார், தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.

அந்த ஒருவர் காலை முதல் மாலை வரை பூங்காவை தூய்மைப்படுத்துகிறார். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். ஆனால் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் பராமரிக்கப்படாததால் துருப்பிடித்து பயன்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது.

இந்த பூங்காவானது நடைபயிற்சி மேற்கொள்வதற்கு தகுதியான இடமாக அமைந்துள்ளது.

மேலும் பார்வையாளர்கள், பெரியோர்கள் அமரக்கூடிய இடமும் உள்ளது. யோகா பயிற்சி பெறுவதற்காக அமைக்கப்பட்ட மேடையும் பயிற்சியாளர் பயிற்சி பெறுவதற்கான இடமும் புல் முளைத்து காணப்படுகிறது.

பூங்காவை சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் உள்ளன. ஆனால் அவை பழுதாகி எரியாமல் உள்ளன. பூங்காவில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளது, ஆனால் மக்களின் பயன்பாட்டுக்கு தான் வரவில்லை.

வேதனை

அடித்தட்டு மக்கள் மூலம் கிடைக்கும்வரி அவர்கள் பயனடைய பயன்படுத்தப்படாமல் உள்ளது. நகராட்சிக்கு வருமானம் குவிந்தும் இந்த பூங்கா எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது.

சிறிய ஊர்களில் உள்ள பூங்காக்கள் கூட பொலிவுடன் பராமரிக்கப்படுகிறது. வருமானம் குவியும் ஆரணி நகராட்சி பழம்பெரும் பூங்காவை பராமரிக்காதது வேதனையை ஏற்படுத்துகிறது.

நடவடிக்கை அவசியம்

இதுகுறித்து ஆரணி ரோட்டரி சங்க தலைவர் எஸ்.டி.செல்வம் கூறுகையில் ''நான் நகர மன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே பல லட்சம் ரூபாய் செலவு செய்தார்களே தவிர முறையாக பராமரிப்பு பணிநடக்காமல் 10 நாட்களிலேயே திறந்து விட்டனர்.

ராட்சத கொசுக்கள் தொல்லையும் உள்ளதால் மாலை 5 மணிக்கு மேல் பொதுமக்கள் செல்ல தயக்கம் காட்டுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதனை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுப்பதோடு விளையாட்டு உபகரணங்களையும் சீரமைத்து இருக்கை பகுதியில் சூழ்ந்த புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. மக்களின் வாழ்வில் அக்கறை காட்டவில்லை என்றார்.

ஆரணி அரிமா சங்க தலைவர் டி.தமிழ்ச்செல்வன் கூறுகையில் ''ஆரணி நகரின் மையத்திலும், நகராட்சி அலுவலகம் எதிரேயும் அமைந்துள்ள இந்த வெங்கட்ராமன் பூங்கா நகராட்சி ஊழியர்களே தினசரி உள்ளே வந்து சென்றாலே பசுமை நிறைந்த நல்ல காற்றோட்டத்துடன் ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியும்.

எங்களைப் போன்ற சமூக சங்கங்கள் மாதத்தில் 2 நாட்கள் வெங்கட்ராமன் பூங்காவிலேயே சங்க கூட்டங்களை நடத்தி வந்தோம்.

மக்கள் பங்களிப்புடன் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தினசரி நாடகம், சமூக விழிப்புணர்வு சம்பந்தமான கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை உள்ளே வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்