சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பி இருந்ததால் அதிர்ச்சி

நாட்டறம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நாத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பியிருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 24,023 மாத்திரைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2023-04-05 16:48 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நாத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பியிருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 24,023 மாத்திரைகள் திருப்பி அனுப்பப்பட்டன.

மாத்திரையில் கம்பி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய ஏழு வயது மகள் மோனிகாவுக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து அனுப்பி உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை சிறுமிக்கு கொடுப்பதற்காக மாத்திரையை உடைத்தபோது அதில் கம்பி இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பணியில் இருந்த டாக்டரிடம் முறையிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேறு மாத்திரை வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

24,023 மாத்திரைகள் திருப்பி அனுப்பப்பட்டன

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில் வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருந்து கிடங்கில் இருந்து பாராசிட்டமல் மாத்திரைகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளது. அதில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலுவையில் இருந்த 24,023 மாத்திரைகளும் வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருந்து கிடங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மாத்திரைகள் தயாரித்த சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கும் புகார் அனுப்பி உள்ளேன் என தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்