செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில்தொழிலாளியின் கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியவர் கைது
செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தொழிலாளியின் கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வளவனூர்,
வளவனூர் அருகே உள்ள வி.புதூரை சேர்ந்தவர் வேலு (வயது 33), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய கூரை வீட்டில் நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வேலு, விழுப்புரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீயில் எரிந்தது. இதில் வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளி கொலுசுகள் மற்றும் மர, இரும்பு பீரோக்கள், டி.வி., கட்டில், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.12 லட்சமாகும். இதுகுறித்து வேலு, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் முன்விரோதம் காரணமாக தனது கூரை வீட்டை அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்கிற மகேஸ்வரன் (43) என்பவர் தீ வைத்து கொளுத்தியிருக்கலாம் எனக்கூறியிருந்தார். அதன்பேரில் மகேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வேலுவிடம் சென்று செலவுக்கு பணம் தரும்படி மகேஸ்வரன் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்க வேலு மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வேலுவின் வீட்டை மகேஸ்வரன் தீ வைத்து கொளுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.