திருவொற்றியூரில் கலைஞர் நற்பணி மன்றத்துக்கு தீ வைத்தவர் கைது
திருவொற்றியூரில் கலைஞர் நற்பணி மன்றத்துக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் தாங்கல் புதிய காலனியைச் சேர்ந்தவர் டில்லிராஜ். இவர் அதே பகுதியில் கலைஞர் நற்பணி மன்றம் நடத்தி வருகிறார். மேலும் கலைஞர் நற்பணி மன்ற தலைவராகவும், தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார்.
கடந்த 7-ந்தேதி இரவு கலைஞர் நற்பணி மன்றம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கலைஞர் நற்பணி மன்றத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியது தெரிந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் கலைஞர் நற்பணி மன்றத்துக்கு பின்புறம் அவரது வீடு உள்ளது. இதனால் தனது வீட்டுக்கு சென்று வர சிரமமாக இருந்ததால் ஜெகநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து மன்றத்தை தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ரமேசை போலீசார் தேடி வருகின்றனர்.