சமூக வலைத்தளத்தில் வீடியோ, ஆடியோ வெளியிட்டவர் கைது
பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ, ஆடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டை காமராஜர் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் அருள் என்ற கோழி அருள் (வயது 50). இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். இது பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தவுப்படி, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கோழி அருள் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது, அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விஜயவாடாவுக்கு சென்று கோழி அருளை கைது செய்தனர்.