பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்தவர் அடையாளம் தெரிந்தது

கோவை பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்து விட்டு பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர் கேரளாவை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரிந்தது.

Update: 2023-06-16 20:15 GMT

கோவை பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்து விட்டு பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர் கேரளாவை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரிந்தது.

எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் மர்ம நபர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. இதை பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பயன்படுத்தி வருகிறார்.

தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் கடந்த 13-ந் தேதி மாலை மர்மநபர் ஒருவர் திடீரென்று புகுந்து அறைக்கதவை மூட முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர் அந்த நபரை அலுவலகத்தை விட்டு வெளியே துரத்தி விட்டார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. அலுவலகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பஸ் முன் பாய்ந்து தற்கொலை

இதற்கிடையே அந்த மர்ம நபர் சிறிது நேரம் கழித்து அவினாசி ரோடு ஜி.டி. மியூசியம் அருகே அரசு பஸ் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீசார் இறந்த நபரின் கைரேகையை வைத்து போலீசாருக்கான பிரத்யேக மென்பொருள் மூலம் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது.

அடையாளம் தெரிந்தது

இறந்தவரின் கைரேகை மூலம் அந்த நபர் கடந்த 2004-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கில் கைதானவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது தெரியவந்தது.

உடனே தனிப்படையினர் கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விவரங்களை சேகரித்தனர்.

இதில் இறந்தவர் மகாதேவன் என்பவரின் மகன் கார்த்திக் என்பதும், அவர் ஒரு வழக்கில் கைதான போது கொடுத்த முகவரிக்கு சென்று தனிப்படை போலீசார் பார்த்தனர்.

ஆனால் அந்த முகவரியில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு இருந்தது.

2 பேரிடம் விசாரணை

இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கார்த்திக்குடன், கைதான 2 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் கார்த்திக்கின் குடும்ப உறுப்பினரை கண்டறிந்து உடலை ஒப்படைக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்