களக்காடு:
சேரன்மாதேவி அருகே உள்ள பத்தமடை புதுமனை தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராமன் (வயது 28). இவர் மலையடிபுதூரை சேர்ந்த சீனித்துரை என்பவரிடம் தொழிலாளியாக உள்ளார். சீனித்துரைக்கும், மலையடிபுதூரை சேர்ந்த சுப்பையா மகன் வானுமாமலைக்கும் (47) முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ராமன் வாழைத்தார்களை எடை போடுவதற்காக களக்காடு எஸ்.என்.பள்ளிவாசல் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வானுமாமலை, மலையடிபுதூரை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் இசக்கிப்பாண்டி என்ற குமார் (38) ஆகியோர் ராமனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது மோட்டார் சைக்கிள் முன் பகுதியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த ராமன் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வானுமாமலையை தேடி வருகின்றனர்.