மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக கீழநாஞ்சில்நாடு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு நின்ற ஒருவர் நீ எந்த ஊர்?, என்ன சாதி என்று கேட்டுள்ளார். மாணவன் தனது சாதியை சொன்னவுடன் அவர் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கு நின்றவர்கள் மாணவனை மீட்டு பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவன் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். பின்னர், அந்த மாணவன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் மாணவனை தாக்கியதாக மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.