மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து
ராணிப்பேட்டை அருகே மாணவிகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 48). இவரது இரண்டு மகள்கள் வாலாஜாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவிகள் கல்லூரியில் இருந்து வரும் போது, லாலாபேட்டையை சேர்ந்த அஜீத், சரண் ஆகிய 2 வாலிபர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள், பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவிகளின் தந்தை சுந்தரேசன், வாலிபர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சுந்தரேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். காயம் அடைந்த அவர் வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.