முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளை திருடும் நபர்

திருவாரூர் அருகே முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளை திருடும் நபர் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

Update: 2022-06-14 18:02 GMT

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 27). குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாமல் திடுக்கிட்டார். அதன்பிறகு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்த்தபோது, முகமூடி அணிந்த 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், அந்த மர்மநபர் காளிதாஸ் வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் சைடு லாக்கரை உடைத்து திருட முயன்றதும், அப்போது அந்த மோட்டார் சைக்கிள் ஏற்கனவே பஞ்சராகி இருந்ததால் அதனை விட்டு, விட்டு காளிதாஸ் மோட்டார் சைக்கிளை மட்டும் எடுத்து சென்றதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து காளிதாஸ் கொடுத்த புகாரின்பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில், மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்