சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது; ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு

சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2023-10-10 19:22 GMT

சிதம்பரம், 

தொடர் திருட்டு

சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகள், கோவில்களை நோட்டமிடும் மர்மநபர்கள் நள்ளிரவு நேரங்களில் கதவு, பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து சிதம்பரம், சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இதனிடையே சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரூபன்குமார் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கைது

அதன்படி தனிப்படை போலீசார் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் நகை, பணம் திருட்டு நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்மணிராஜா(வயது 40) என்பவர் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு போலீஸ் சரகத்துக்குட்பட்ட வீடுகள், கோவில்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நகைகள், பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட கம்மாபுரம் பகுதியில் பதுங்கியிருந்த கண்மணிராஜாவை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 15½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்