பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விராலிமலை தாலுகா மீனவேலி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 40). இவர் கடந்த 26-ந் தேதி கோவில்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். கோவில்பட்டி- வேம்பனூர் செல்லும் வழியில் உள்ள நடுப்பட்டி வளைவில் சென்றபோது பஸ்சிலிருந்து சின்னப்பன் கீழே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னப்பன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.