டீக்கடையில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
டீக்கடையில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
பெரம்பலூர் புறநகர்பகுதியான துறைமங்கலம் நியூ காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னையன்(வயது 52). இவர் துறைமங்கலம் பங்களா பஸ் நிறுத்தம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை சின்னையன் தனது டீக்கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், கடையின் உள்ளே ஒரு நபர் இருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்து கடையை திறந்தார். அப்போது இதனை கண்ட கடைக்குள் இருந்த நபர் சின்னையனை தள்ளி விட்டு, தப்பி ஓடினார். இதனால் சின்னையன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டபடியே பின் தொடர்ந்து ஓடினார். அப்போது சின்னையன் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் எழுந்து வந்து அந்த நபரை பிடிக்க ஓடினர். நியூ காலனி பள்ளி வாசல் அருகே சென்ற அந்த நபரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கல்பாடி தெற்கு தெருவை சேர்ந்த முத்து என்கிற முத்துசாமி (52) என்பதும், அவர் அந்த டீக்கடையில் பணம் திருட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே அவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.