'சாலையை காணோம்' என்று மனு கொடுத்த பொதுமக்கள்

‘கிணற்றை காணோம்' என்ற சினிமா காமெடியைபோல், ‘சாலையை காணோம்' என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-04-17 19:00 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். இந்த நிலையில் நிலக்கோட்டை தாலுகா மாவுத்தன்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

இதைப்பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எங்கள் ஊரில் இருந்து கொடைரோட்டுக்கு செல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்சாலையை தற்போது காணவில்லை. அதனை கலெக்டர் கண்டுபிடித்து தர வேண்டும் என கோரி மனு கொடுப்பதற்காக வந்தோம் என்றனர். இதைக்கேட்டதும் போலீசார், என்னடா இது 'கிணற்றை காணோம்' என்று சினிமாவில் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியில் வருவதை போல் உள்ளதே என திடுக்கிட்டனர்.

வீட்டுமனை பட்டா

பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கூட்ட அரங்குக்கு சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சமூக விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டுக்குழு சார்பில் திருமலைக்கேணியை அடுத்த கம்பிளியம்பட்டியில் வீடு இல்லாமல் தவிக்கும் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பின்னர் ஆத்தூர் தாலுகா முன்னிலைக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தெருவிளக்கு, சமுதாய கூடம், சாலை, குடிநீர் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம் எனவே அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பல்வேறு முறைகேடுகள்

கொடைக்கானல் தாலுகா கூக்கால் ஊராட்சி 1,3,5,8,9 ஆகிய வார்டுகளை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்குவது, சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்று நடந்த கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 203 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 37 பேருக்கு மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொழில் கடனாக ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார்.

தையல் எந்திரங்கள்

மேலும் தாட்கோ மூலம் 47 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு இலவச தையல் எந்திரங்கள், வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த பயனாளிகள் 5 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்