ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் - அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேட்டி

ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.

Update: 2022-06-16 09:24 GMT

சென்னை,

அ.தி.மு.க. வில் ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பு குழுவை கலைத்துவிட்டு 20 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அ.தி.மு.க.வில் தற்போது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.முக.வில் ஒற்றைத் தலைமை முறையை கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளும் முயற்சிகளால் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் சென்னை, தேனி உள்பட பல்வேறு இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இது அ.தி.மு.க.வில் சர்ச்சையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வின் ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, கட்சி நகமும் சதையும் போல் உள்ளது. திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். கட்சியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடு. ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும். அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்