``தனி நபர் என்பதை விட எனக்கு கட்சிதான் முக்கியம்'' -திருச்சி சிவா எம்.பி. பேட்டி

Update: 2023-03-16 19:19 GMT

வீடு மீதான தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது. தனி நபர் என்பதை விட எனக்கு கட்சிதான் முக்கியம் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.

வீடு மீது தாக்குதல்

திருச்சி நியூ ராஜா காலனியில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை அவருடைய வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக செசன்சு கோர்ட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் பக்ரைனில் 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் இந்தியா சார்பில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டுவிட்டு நேற்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். வீட்டுக்கு வந்த அவர், தி.மு.க.வினரால் சேதப்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், வீட்டின் முன்பகுதியை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் நடந்த போது அங்கு இருந்த அவரது உதவியாளர் மற்றும் நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டறிந்தார். பிறகு தனது ஆதரவாளர்களை அழைத்து பேசினார்.

முன்னதாக திருச்சி சிவா எம்.பி. தனது வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சி தான் முக்கியம்

178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பக்ரைன் நாட்டுக்கு சென்றுவிட்டு தற்போது தான் திரும்பி இருக்கிறேன். இங்கு நடந்த செய்திகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இப்போதைக்கு நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான ஒரு கட்சிக்காரன்.

என்னை விட கட்சி தான் முக்கியம் என்று நினைப்பவன். ஆகவே பல சம்பவங்கள் நடத்தியதை நான் பெரிதுபடுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம்தான் முக்கியம் என வளர்ந்தவன். அப்படித்தான் இப்போதும் இருக்கின்றேன்.

மிகுந்த மனவேதனை அளிக்கிறது

தற்போது நடந்த சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் என் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். காயமடைந்து இருக்கிறார்கள். மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். மனச்சோர்வில் இருக்கிறேன்.

நான் எப்போதும் மனச்சோர்வு என சொன்னதில்லை. ஆனால் என்னுடன் இருக்கும் வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நிலையை பார்க்கும் போது மனச்சோர்வு ஏற்படுகிறது. நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது.

இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்