பழங்குடியின மக்கள், வனவிலங்குகளின் உருவச்சிலைகளுடன் ஜொலிக்கும் பூங்கா

ஊட்டி எச்.பி.எப். பகுதியில் பழங்குடியின மக்கள், வனவிலங்குகளின் உருவச்சிலைகளுடன் புனரமைக்கப்பட்ட பூங்கா ஜொலிக்கிறது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

Update: 2023-07-13 21:30 GMT

ஊட்டி

ஊட்டி எச்.பி.எப். பகுதியில் பழங்குடியின மக்கள், வனவிலங்குகளின் உருவச்சிலைகளுடன் புனரமைக்கப்பட்ட பூங்கா ஜொலிக்கிறது. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.

வளர்ச்சி பணிகள்

ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகரின் சிறப்பை குறிக்கும் வகையிலும், வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஆங்காங்கே சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதேபோன்று எச்.பி.எப். பகுதியில் உள்ள பூங்கா புனரமைக்கப்பட்டு, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

பூங்கா புனரமைப்பு

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து வருபவர்கள் குன்னூரில் இருந்து வேலிவியூ வழியாக ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் ஊட்டி நகரின் நுழைவுவாயிலான வேலிவியூ பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று கேரளா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டி வருகின்றனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கவும், அவர்கள் கண்டு களிக்கும் வகையிலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் எச்.பி.எப். பகுதியில் சாலையின் நடுவே உள்ள பூங்கா ரூ.80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மாத இறுதிக்குள்...

அங்கு தோடர் பழங்குடியின மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் சிலைகள், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சிலைகள், கண்ணை கவரும் விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, பூங்கா ஜொலித்து வருகிறது.

மேலும் ஹில்பங்க் பகுதியில் உள்ள சாலையோர பூங்காவும் பொலிவுபடுத்தப்பட்டு காட்டெருமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்