சுதந்திர தினவிழாவில் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கக்கூடாது; வார்டு உறுப்பினர்கள் மனு
சுதந்திர தினவிழாவில் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சுதந்திர தினவிழாவில் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வரி விலக்கு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ேநற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
கூட்டத்தில் மனு கொடுக்க தமிழ்நாடு முன்னாள் துணை ராணுவ படை நலச்சங்க நிர்வாகிகள் தலைமையில், முன்னாள் துணை ராணுவ வீரர்கள் ஏராளமானோர் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் பணியில் உள்ள மற்றும் முன்னாள் படைவீரர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் உள்ளனர். முன்னாள் மற்றும் தற்போதைய துணை ராணுவ வீரர்கள் சங்க அலுவலகம் மற்றும் கேண்டீன் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதற்கு அரசு கட்டிடமோ அல்லது காலியிடமோ அளிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து துணை ராணுவ வீரர்களுக்கும் வீட்டுவரி, குழாய் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல், தேனி மாவட்டத்திலும் வீட்டுவரி, குழாய் வரி விலக்கு அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
ஊராட்சியில் முறைகேடு
சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "சுருளிப்பட்டி ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்ட போதிலும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லாததால் ஊரே குப்பை மயமாக காட்சி அளிக்கிறது. கலெக்டர் ஆய்வு செய்தால் உண்மை நிலை தெரியும். ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ஏலம் விடப்பட்ட பணிகள் 2 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடியேற்ற அனுமதிக்கக்கூடாது. நடவடிக்கை எடுக்காவிட்டால் வார்டு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வோம்" என்று கூறியிருந்தனர்.
நிவாரணம்
முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "முத்துத்தேவன்பட்டியில் அரிஜன தெரு, அரிஜன காலனி என்று உள்ள பெயர்களை மாற்றிவிட்டு, தலைவர்களின் பெயரை சூட்ட வேண்டும். பல தலைமுறையாக வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
அதுபோல், பண்ணைத்தோப்பு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை வேறு மையத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பண்ணைத்தோப்பு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
உப்புக்கோட்டையை சேர்ந்த கட்டுமான தொழிலாளி கண்ணன் என்பவர் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மனைவி புவனேஸ்வரிக்கு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.