கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் கைது
வடமதுரை அருகே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டு போட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பாகாநத்தத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 72). இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். பாகாநத்தத்தில் உள்ள மயானத்தில், தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாக சிவசாமி அடிக்கடி கூறி வந்தார்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அவர் பலமுறை மனுக்களை கொடுத்தார். மேலும் வருவாய்துறையினரிடம் சென்று, மயானத்தில் உள்ள தனது நிலத்தை அளவீடு செய்து தருமாறு சிவசாமி கூறி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பாகாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சிவசாமி சென்றார். அப்போது அங்கு கிராம உதவியாளர் செல்வராணி இருந்தார்.
அவரிடம் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுங்கள், நான் அலுவலகத்துக்கு பூட்டு போடப்போகிறேன் என்றார். இதனால் செல்வராணி அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவர், அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து விட்டார். இதனால் சிவசாமி அங்கிருந்து சென்று விட்டார்.
கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டு
இந்தநிலையில் நேற்று காலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு மீண்டும் சென்றார். ஆனால் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது. ஏற்கனவே அலுவலக கதவில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது.
தான் கொண்டு வந்த பூட்டை அதற்கு மேல் போட்டு பூட்டி விட்டு சிவசாமி சென்று விட்டார். இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலகத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் நேற்று காலை வந்தார். தான் பூட்டியிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டு தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர், எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த சிவசாமியை போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த சாவியால் அந்த பூட்டை திறந்தனர்.
கைது-பரபரப்பு
பின்னர் சிவசாமி, விசாரணைக்காக எரியோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, மயானத்தில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகவும், அதனை அளவீடு செய்து ஒதுக்கி தராததால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து சிவசாமியை கைது செய்தார். கிராம நிர்வாக அலுவலகத்தை, கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் பூட்டு போட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
----------
மயங்கியதால் போலீசார் அதிர்ச்சி
பாகாநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டு போட்ட சிவசாமியை போலீசார் பிடித்து விசாரணைக்காக, எரியோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தண்ணீர் தெளித்து சிவசாமியை போலீசார் ஆசுவாசப்படுத்தினர். அதன்பிறகே அவருக்கு மயக்கம் தெளிந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையே சிவசாமியை கைது செய்த போலீசார், அவரது வயது முதிர்வு காரணமாக ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.