வட்டிக்கு பணம் கொடுப்பவர் வெட்டிக்ெகாலை

வேளாங்கண்ணி அருகே வட்டிக்கு பணம் கொடுப்பவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-18 17:39 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே வட்டிக்கு பணம் கொடுப்பவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது40). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது அலுவலகம் வேளாங்கண்ணி முச்சந்தியில் உள்ளது.

மனோகர் நேற்று முன்தினம் இரவு தனது அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

சரமாரியாக அரிவாள் வெட்டு

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களை தடுக்க முயன்ற மணிவேலையும் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

காயம் அடைந்த மணிவேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மனோகரின் உறவினர்கள் நேற்று தெற்குபொய்கைநல்லூர் அருகே பரவையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மனோகரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் நாகை- திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்