விருதுநகர் அருங்காட்சியகத்தில் பழமையான முவரி இசைக்கருவி

விருதுநகர் அருங்காட்சியகத்தில் பழமையான முவரி இசைக்கருவியைகண்டு களிக்கலாம் என அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.

Update: 2022-06-04 16:36 GMT

விருதுநகர்

விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் சிறப்பு ஏற்பாடாக ஒரு பழமை வாய்ந்த பொருள் காட்சிப்படுத்தப்படுகிறது. அதன்படி நேற்று முவரி என்ற மிகவும் பழமையான காற்றிசை கருவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த பழமையான காற்றிசை கருவியானது வடமேற்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவி ஆகும். கி.பி. 330-க்கும் 400-க்கும் இடைப்பட்ட காலத்தில் காந்தார சிற்பத்தில் இக்கருவியானது சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியானது முவரிமொஹோரி, மதுகரி போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இச்சொல்லானது மொழியியல் ரீதியாக குழாய் அல்லது வடிகால் என்ற பொருளுடைய மோரி என்ற சொல்லில் இருந்து தோன்றியிருக்கலாம்.

இந்திய பாரம்பரிய இசை பற்றிய சமஸ்கிருத உரையான மாதங்கி முனியின் பிரிஹத்தேஷி இது பற்றி குறிப்பிடுகிறது. கன்னட கலைஞரும், துறவியும், இசைக் கலைஞருமான புரந்தரதாசர் சூலடிகள் என்றழைக்கப்படும் அவரது இசையமைப்பில் இதைப் பற்றி குறிப்பிடுகிறார். முவரியின் ஆதி வடிவம் பயன்பாட்டில் இல்லை என்றும், அதன் உருமாறிய வடிவங்களாக கருதப்படுகின்ற மகுடி, முகவீணை, மொஹேரி, கடங்கு, குமுரி ஆகிய காற்றுக் கருவிகள் உருவத்தில் இன்று வரை தமிழகம், அசாம், ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உயிர்த்திருக்கிறது, இத்தகைய முவரி என்ற இசைக்கருவியை உதகமண்டலத்தை சேர்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழக நிர்வாக அதிகாரி தினேஷ் லர்தன் என்பவர் விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இத்தகைய முவரி என்ற பழமையான இசைக்கருவியை இம்மாதம் முழுவதும் பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம் என அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்