சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழைய தாலுகா அலுவலகம்
சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமாக பழைய தாலுகா அலுவலகம் மாறி வருகிறது. எனவே தகுந்த நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
சீர்காழி:
சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமாக பழைய தாலுகா அலுவலகம் மாறி வருகிறது. எனவே தகுந்த நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
தாலுகா அலுவலகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் பழைய தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், சார் கருவூலம், பத்திரப்பதிவுத்துறை, புள்ளியல் துறை, தேர்தல் பிரிவு, குடிமை பொருள் வட்ட வழங்கல், சமூக நலத்துறை ஆகிய துறைகள் செயல்பட்டு வந்தன. இந்த அலுவலகங்கள் சீர்காழி பகுதி மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட கட்டிடங்கள் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக மாறியதாலும் பராமரிக்கப்படாததால் கட்டிடம் சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் தற்போது எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மதுப்பிரியர்களின் கூடாரம்
இந்தநிலையில் பழைய தாலுகா அலுவலக கட்டிடம் தற்போது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது. காலை நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாகவும் செயல்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தை சுற்றிலும் சமூக விரோதிகள் உள்ளே புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், சீர்காழி பழைய தாலுகா அலுவலகம் பஸ் நிலையத்திற்கு அருகில் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது வேறு இடத்துக்கு தாலுகா அலுவலகம் மாற்றப்பட்டதால் பழைய தாலுகா அலுவலகம் மதுப்பிரியர்களின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது.
மதுபாட்டில்கள்
எங்கு பார்த்தாலும் ஏராளமான மது பாட்டில்கள் சிதறி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தின் உள்ளே யாரும் புகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் இரவு நேரங்களில் பழைய தாலுகா அலுவலக வளாகத்துக்குள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.