மின்வேலி அமைத்த முதியவர் கைது
வனவிலங்குகளை வேட்டையாட மின்வேலி அமைத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை வனச்சரக பகுதியில் சில இடங்களில் வன விலங்குகளை வேட்டையாட மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனகாப்பாளர்கள் சிரஞ்சீவி, முகமது சுல்தான், பாலாஜி, மறுவரசன், மணிவேலன், சங்கீதா ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர்
திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கவுத்தி மலை, காப்புக்காடு, திருவண்ணாமலை - காஞ்சி சாலை காப்புக்காட்டு ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மின்வேலிகள் ஏதேனும் அமைக்கப்பட்டு உள்ளதா என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புனல்காடு கிராமம் காப்புக்காட்டை ஒட்டியுள்ள சண்முகம் (வயது 69) என்பவர் அவரது பட்டா நிலத்தில் வனவிலங்கு வேட்டைக்காக மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சோதனையில் மின்வேலியில் சிக்கி 2 ஆண் புள்ளிமான் மற்றும் ஒரு நாய் இறந்து கிடந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் மின்வேலி அமைத்த சண்முகத்தை கைது செய்து விசாரணை செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.