ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள் முற்றுகை

மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் மீனவர் குப்பத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-26 05:01 GMT

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம், நெம்மேலி, புதுகல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்டு, அதுபற்றிய அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து பட்டிபுலம் மீனவர் கிராமத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சுனாமி திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் வீடுகள் கட்டிகொள்ள ஆணை பிறப்பித்ததாகவும், ஆனால் வீட்டு மனைபட்டா வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதையடுத்து பட்டிபுலம் மீனவர் பகுதியில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள வீடுகளை தாங்களாகவே அகற்றி கொள்ள மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம் அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியதாகவும், கெடு தேதி முடிந்த நிலையிலும் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளாததால் கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில், அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள 18 வீடுகளை அகற்றும் வகையில் பூட்டி சீல் வைக்க சென்றனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது அறநிலையத்துறை அதிகாரிகள் ஊருக்குள் செல்ல முயன்றபோது பட்டிபுலம் மீனவர் குப்பம் நுழைவு வாயில் பகுதியிலேயே பட்டிபுலம் ஊராட்சிமன்ற தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், ஒன்றிய கவுன்சிலர் தேசிங்கு, முன்னாள் பட்டிபுலம் ஊராட்சி துணைத்தலைவர் எஸ்.சேகர், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமிவேதகிரி, அன்புரமா, விஷால் உள்ளிட்ட மீனவ பஞ்சாயத்தார்கள், பெண்கள் என 200 பேர் அதிகாரிகளை முற்றுகையிட்டு, மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் 18 வீடுகள், கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு கட்டி கொடுத்த வீட்டை எப்படி நீங்கள் அகற்ற வரலாம், நாங்களும் கோர்ட்டை நாடி மனுதாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை வீடுகளை அகற்ற கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 3 மணி நேரத்திற்கு மேலான சலசலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. பிறகு போலீசார் மீனவர்களை சமாதானம் செய்தனர். 18 வீடுகளை அகற்றும் பணியை கைவிட்டு கோர்ட்டை அணுக மீனவர்களுக்கு கால அவகாசம் அளித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றதை காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்