தலையில் இருந்த இரும்பு நட்டை அகற்றாமலே தையல் போட்ட செவிலியர்கள்...!

விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலே, அரசு மருத்துவமனை செவிலியர்கள் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-06 11:41 GMT

சென்னை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). இவர், லாரி டிரைவராக உள்ளார். இந்த சூழலில் நேற்று காலை இவர் மாதனூர் அருகே லாரி ஓட்டி சென்ற போது பின்னால் வந்த தனியார் பேருந்து இவரின் லாரி மீது மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து லாரி டிரைவர் கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பணி நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் கார்த்திகேயனுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்த செவிலியர்கள், அவரின் தலையில் தையல் போட்டுள்ளனர். ஆனால் தையல் போடப்பட்ட இடத்தில் ரத்தம் வழிவது மட்டும் நிற்கவில்லை. மேலும் அவருக்கு தலையில் கடுமையான வலியும் இருந்துள்ளது.

இதனால் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மீது அதிருப்தி அடைந்த கார்த்திகேயனின் உறவினர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தனியார் டாக்டர்கள் மீண்டும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்த போது தான் உண்மை தெரிய வந்தது. தையல் போடப்பட்ட இடத்தில் இரும்பு நட்டு இருந்துள்ளது. இதை பார்த்து டாக்டர்களும், கார்த்திகேயனின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், தையலை பிரித்து, இரும்பு நட்டை அகற்றி உள்ளனர். எனினும் தொற்று காரணமாக, 2 நாட்கள் கழித்தே மீண்டும் தையல் போட முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கார்த்திகேயனின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரிவான விசாரணைக்கு பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும அரசு மருத்துவமனை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்