மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வேலூரில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலூரில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சாரல் மழை
வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இரவில் கடும்பனி கொட்டியது. விடிந்த பின்னரும் பலமணி நேரம் சாலைகளை பனி சூழ்ந்திருந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடடி சென்றன.
இந்தநிலையில் அதிகாலை வேலூரில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. காலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை காலை 11 மணி வரை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் மாறி, மாறி பெய்தது.
இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் மாணவ- மாணவிகள் இருந்தனர். அவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்படும் வரை தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்தனர். எனினும் விடுமுறை அளிக்கப்படாததால் அவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்றனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலை பணி, கால்வாய் அமைக்கும் பணி நடைபெறும் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.
வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். தொடர்ந்து மழை விட்டு, விட்டு பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 12 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.