பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் நூதன போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பா.ஜனதாவினர் நூதன போராட்டம் நடத்தினர்.
நூதன போராட்டம்
குமரி மாவட்ட பா.ஜனதா பட்டியல் இனத்தவர் அணி சார்பில் அம்பேத்கர் உருவப்படம் முன்பு மனு வைக்கும் நூதன போராட்டம் நாகர்கோவில் வடசேரியில் நேற்று நடந்தது.
அந்த மனுவில், "மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் உள்ள பட்டியல் சமுதாய மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்துக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமுதாயத்திற்கான துணைத்திட்ட நிதியை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், தங்கள் மனம் போன போக்கில் செலவு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அதிலும் கடந்த 2021- 2022-ம் ஆண்டில் ரூ.2,418 கோடியும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.16,442 கோடியும் ஒதுக்கியதில் ரூ.10,446 கோடி செலவு செய்யாமல் ஏமாற்றியுள்ளனர். மத்திய அரசு கொடுக்கும் நிதியை மக்களுக்கு செலவு செய்யாமல் பட்டியல் சமுதாய மக்களை ஏமாற்றும் துரோகத்தை தி.மு.க. அரசு செய்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு அளிக்கும் போராட்டத்துக்கு பட்டியலினத்தவர் அணி மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முத்துராமன், பொதுச் செயலாளர்கள் முருகன், ஜெகநாதன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவர் தேவ், மாநகர பார்வையாளர் அஜித் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.