காட்சி பொருளாக மாறிய 'புதிய ரேஷன்கடை'

திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு காட்சி பொருளாக இருக்கும் ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-19 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகலில் புதிதாக கட்டப்பட்டு காட்சி பொருளாக இருக்கும் ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன்கடை கட்டிடம்

திருமருகல் ஊராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள கண்ணுடையான் தோப்பு, கல்லுளி திருவாசல், சன்னதி தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நலன்கருதி திருமருகல் அம்மா குளத்தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் ரேஷன்கடை கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதற்கு மாற்றாக அருகில் திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை புதிய கட்டிடத்தை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

பயன்பாட்டுக்கு கொண்டுவர...

இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு ரேஷன்கடை கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்