நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-07 21:01 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அம்பை, சேரன்மாதேவி ஒன்றிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், ''நடப்பு கார் பருவத்துக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தெற்கு கோடை மேலழகியான், வடக்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் ஆகிய கால்வாய்களில் ஜூலை மாதம் 19-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படுவதாக அரசு அறிவித்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதை நம்பி விவசாயிகள் 4 கால்வாய்கள் பாசன பரப்பில் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் நடவு செய்துள்ளனர். மேலும் 8 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்வதற்கு தேவையான நாற்று பாவப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென விவசாயத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே நடவு செய்துள்ள பயிரைக் காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையெனில் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

மானூர் அருகே பல்லிக்கோட்டை பஞ்சாயத்தில் உள்ள நெல்லை திருத்து கிராம மக்கள், பெண்கள் காலிக்குடங்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 3 கிராமங்களுக்கும் ஒரே கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து ஒரே குழாய் மூலம் பல்லிக்கோட்டை விலக்கு வரை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து 3 கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அலவந்தான்குளத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது, மேலும் நெல்லை திருத்துக்கும் 1 மாதமாக தண்ணீர் சரியாக வரவில்லை. இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் கிணற்றில் உள்ள 7½ குதிரை திறன் மின் மோட்டாருக்கு பதிலாக 10 குதிரை திறன் மோட்டார் பொருத்தி கூடுதலாக தண்ணீர் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இதை செய்ய விடாமல், ஒரு கிராமத்துக்கு மட்டும் தனியாக மோட்டார், தனி குழாய் பதிக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். இது சமுதாய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே தற்போது உள்ள நிலையிலேயே அதிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றி கூறி உள்ளனர்.

இதேபோல் முனைஞ்சிப்பட்டி பேரூராட்சி இந்திராநகர் பொதுமக்களும் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''தங்கள் பகுதிக்கு கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் பிரச்சினையை சரி செய்ய வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

நாங்குநேரி தாலுகா தோட்டாக்குடி பஞ்சாயத்து வடக்கு பத்தினிப்பாறை மக்களும் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், ''எங்கள் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கிணறு மாசடைந்துள்ளது. மேலும் குடிநீர் பகிர்மான குழாய்களும் சேதமடைந்து உள்ளன. எனவே, கிணறு, குழாய்களை சீரமைத்து சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்