கன்னியாகுமரியில் 150 அடி உயர கம்பத்தில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி

கன்னியாகுமரியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடிக்கம்பம் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் உள்ளது.

Update: 2022-06-29 16:18 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடிக்கம்பம் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் உள்ளது.

150 அடி உயர கொடிக்கம்பம்

இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், நாட்டின் எல்லை பகுதி, டெல்லியில் இருப்பது போல் மிக உயரமான தேசிய கொடிக்கம்பம் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக விஜயகுமார் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 லட்சத்தை ஒதுக்கினார்.

அதன்படி கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு நான்குவழி சாலையில் 150 அடி உயர கொடிக்கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வந்தன. பணியின் இறுதியாக ராட்சத கிரேன் உதவியுடன் கொடிமரமும் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா  நடைபெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டது

இந்த விழாவுக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜயகுமார் எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பிரமாண்டமான கொடிக்கம்பத்தில் 48 அடி நீளம், 32 அடி அகலம் உடைய தேசியக்கொடி பறந்தது. இந்த தேசியக்கொடி வருடத்தின் எல்லா நாட்களும் இரவும், பகலுமாக பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்கு வசதியாக கொடிக்கம்பத்தில் மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

விஜய் வசந்த் எம்.பி.

இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் மேயர் மகேஷ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் ஒன்றியகுழு தலைவர் அழகேசன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் பாபு, மாவட்ட பாஜ.க. பொருளாளர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்