நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆவணி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்:
ஆவணி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகராஜா கோவில்
நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவது விசேஷமாகும். இதனால் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு ஆவணி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 4.30 மணியில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள். இதற்காக கோவிலின் உள்புறத்தில் இருந்து பிரதான வாயில் வரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டனர்.
குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு
நாகராஜா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து வழிபாடு செய்தனர். பலர் கைக்குழந்தைகளோடு வந்து இருந்தனர். இதனால் நேற்று மதியம் நடை சாத்துவது தாமதம் ஆனது. பக்தர்கள் வசதிக்காக அவர்களுக்கு தேவையான பால் பாக்கெட், மஞ்சள் பொடி, பூ, பழம், தேங்காய் தட்டு உள்ளிட்டவை கோவில் வளாகத்துக்குள்ளேயே விற்பனை செய்யப்பட்டது.
பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நாகராஜா திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. போலீசார் சீருடையிலும், மப்டி உடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அறங்காவலர் குழுத்தலைவர்
குமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் நாகராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.