நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆண்களும், பெண்களும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
நாகர்கோவில்:
ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆண்களும், பெண்களும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.
நாகராஜா கோவில்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இது நாகதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து வழிபாடு செய்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இதனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவிலுக்கு வந்து நாகர்சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டு செல்கிறார்கள். அதிலும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகள் இந்த கோவிலின் விஷேசமான நாட்களாகும். இந்த நாட்களில் வழக்கத்தைவிட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
நீண்ட வரிசை
இந்த ஆண்டு ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் இருந்தே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி காலையிலேயே ஆண்களும், பெண்களுமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர். இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
கோவில் வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நாகராஜா திடலில் நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்யச் சென்றனர்.
பலத்த பாதுகாப்பு
ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா திடலில் திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை மூடப்படும். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடையை மூடுவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கோவிலில் 31 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிடுவதற்கு வசதியாக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.