நெல்லையில் மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது
நெல்லையில் மோட்டார் வாகன திருத்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளிலேயே வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்
நெல்லையில் மோட்டார் வாகன திருத்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளிலேயே வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாகன சட்டத்தில் திருத்தம்
வாகன விபத்துகளை தவிர்க்க எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும் பெரும்பாலானோர் விதிகளை மீறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிறிய விதி மீறல் பெரிய இழப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே அபராத தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும் என்று மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இதனால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த போக்குவரத்து திருத்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி அரசாணை வெளியிட்டு இருந்தார்.
அமலுக்கு வந்தது
அதன்படி தமிழகத்தில் நேற்று இந்த போக்குவரத்து திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. இதையொட்டி நெல்லை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதாவது வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலும், பாளையங்கோட்டை பஸ்நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டியன் தலைமையிலும், நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே மற்றும் ஸ்ரீபுரம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லதுரை தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சப்பாணி, ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அபராதம் விதிப்பு
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களை வேகமாக ஓட்டியவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000, சீட்பெல்டு அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.1000, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.1000, காப்பீடு செய்யாத வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டது. நெல்லையில் முதல் நாளிலேயே அபராதம் விதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் மாநகர பகுதிகளில் சில இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு முதல்நாள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
மேலும் சிலர் ஹெல்மெட்டை தலையில் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டில் மாட்டிக்கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். இனிமேல் ஹெல்மெட் தலையில் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
போலீஸ் சூப்பிரண்டு
இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், 'நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மோட்டார் வாகன திருத்த சட்டம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்' என்றார்.