"போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள்" - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் நெகிழ்ச்சி
திருவண்ணாமலை அருகே 80 ஆண்டுகளாக அம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கலெக்டர் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூரில் 80 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு நடத்தியது குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் கூறியதாவது:-
"திருவண்னாமலை மாவட்டத்தில் 80 ஆண்டுகளாக கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழுப்பு தினத்தில் கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு செய்ய வைத்தோம். அம்மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டியுள்ளோம். போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள்" என்று கூறினார்.
முழு விவரம்:-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் தென் முடியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்படுகிறது.
மேலும் தை மாதங்களில் நடக்கும் விழாவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் விழா எடுக்கின்றனர். அவர்கள் அந்த நாட்களில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இந்த கோவிலுக்குள் வருவதற்கோ பொங்கல் வைத்து வழிபடுவதற்கோ அங்குள்ள ஆதி திராவிட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதனால் மனவேதனை அடைந்த ஆதிதிராவிட சமூக மக்கள் தங்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென்று போராடி வந்தனர். இந்த கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் அங்குள்ளவர்களால் விழாக்கள், பூஜைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. 80 ஆண்டுகளாக இதே நிலைதான் இருந்து வந்தது. இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில், நேற்று ஆதிதிராவிட இன மக்கள் தென் முடியனூர் முத்து மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன் திரண்டனர். பதற்றத்தை தணிக்க தென்முடியனூர் முத்துமாரியம்மன் கோவில் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆயுதப் படையின் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தென் முடியனூர் கிராமம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
காலை 11 மணி அளவில் கலெக்டர் முருகேஷ் தென்முடியனூர் கிராமத்துக்கு வந்தார். அவரது முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.
அப்போது பலர் கலெக்டர் முருகேஷ் காலில் விழுந்து தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தென்முடியனூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.