வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-02-27 18:45 GMT


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர், திருவாரூர், காங்கேயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் துனிசியா நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. இதில் சேர்த்து விடுவதாக கூறி தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினர். ஆனால் பல மாதங்களாகியும் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை. சில நாட்களில் அனுப்பி விடுவோம் என்று பதில் கூறி தட்டி கழித்து வந்தனர். இதனால் பணத்தையும் கொடுத்து வேலைக்கும் செல்லாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம்.

எனவே சம்பந்தப்பட்ட 3 பேரிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ரேஷன் கடை

ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒக்கநாடு கீழையூரில் முழுநேர, பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளது.7 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. முழு நேர ரேஷன்கடக்கு நிரந்தர இடம் இல்லாமல் தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. அதே போல் வடக்குப்பகுதியில் செயல்படும் பகுதி நேர ரேஷன்கடைக்கும் நிரந்தர கட்டிடம் இல்லை. எனவே ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

84 வயது மூதாட்டி புகார்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள் (வயது 84) என்பவர் தள்ளாடியபடி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்தேன். பின்னர் சொந்த ஊருக்கு வந்து கிடைக்கும் வேலையை செய்து வந்தேன். வயது முதிர்வால் என்னால் முன்பு போல் வேலை பார்க்க முடியவில்லை. எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனது மகன் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டார். நான் அணிந்திருந்த நகைகளை விற்று அவருக்கு நான் வீடு கட்டி கொடுத்தேன். ஆனால் என்னை சரிவர கவனிப்பதில்லை. என் மகன் என்னிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்ட சொத்துக்களை என்னிடம் மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்