சுரங்க நடைபாதையை உரிய வசதிகளுடன் சீரமைக்க வேண்டும்
சத்துவாச்சாரியில் உள்ள சுரங்க நடைபாதையை உரிய வசதிகளுடன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சத்துவாச்சாரியில் உள்ள சுரங்க நடைபாதையை உரிய வசதிகளுடன் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுரங்க நடைபாதை
வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. சாலைக்கு செல்ல, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து வந்தனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு, உயிர்ப்பலியும் ஏற்பட்டது. எனவே அந்தப்பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சுரங்கநடைபாதை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. அதை தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறிது தூரம் தள்ளி முருகன் தியேட்டர் சாலைக்கு செல்லும் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுரங்கநடைபாதை உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
துர்நாற்றம்
தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் சாலை பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதை இருப்பதே பலருக்கு தெரியவில்லை. இதனால் நாளடைவில் பொதுமக்கள் பயன்படுத்துவது குறைந்தது. மேலும் அங்கு உரிய வசதிகள் ஏதும் இல்லை. மின் விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, சுகாதார வசதி ஏதும் இல்லாமல் உள்ளது. படிக்கட்டுகள் இடிந்து நடந்து செல்ல முடியாத வகையில் உள்ளது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.
அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளதால் சுரங்கப்பாதை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைநீர் செல்ல வழியில்லாததால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. ஒருசிலர் அதை பயன்படுத்த வரும்போது பராமரிப்பு இல்லாத நிலையை கண்டு திரும்பி செல்கின்றனர். படிக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சிறுநீர் கழித்து வருவது வாடிக்கையாக உள்ளது. படிக்கட்டுகளில் செடி, கொடிகள் முளைத்துள்ளன.
பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுரங்கநடைபாதையை சீரமைக்க வேண்டும். மேலும் சுரங்கநடைபாதை உள்ளது என்பது பொதுமக்களுக்கு தெரியும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். மேலும் மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.