விபத்தில் படுகாயம் அடைந்த பால் வியாபாரி சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் படுகாயம் அடைந்த பால் வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு சென்ற தனியார் பள்ளி வேனும், ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு திருவானைக்கோவில் ரெயில்வே மேம்பாலம் வழியாக சென்ற பஸ்சும் கடந்த 28-ந்தேதி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் டிரைவர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். மேலும் சாலையோரமாக நின்ற வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்த பால் வியாபாரியான செல்வராஜ் (வயது 66) மீது கல்லூரி பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.