ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும்
ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சரவணன், இளங்கோவன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை மேலாளர் பன்னீர்செல்வம் படித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
விஜயகுமார்(அ.தி.மு.க.):- புதுத்துறை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து கடந்த இரண்டு கூட்டங்களில் தெரிவித்து வருகிறேன். இதுவரை நடவடிக்கை இல்லை. இதே போல் தில்லைவிடங்கம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை சரி செய்ய வேண்டும்.
வடிகால் வசதிக்கு பதிலாக...
ரிமாராஜ்குமார்(அ.தி.மு.க.):- எனது ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் போதிய அடிப்படை வசதி இல்லாமல் தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அரசு சார்பில் நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும். 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் வடிகால் வசதிக்கு பதிலாக சாலைகள் அமைக்கும் பணி மாற்றிகொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
ஜான்சிராணி(சுயேச்சை):- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது போல், ஒன்றிய உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை தரமாக வழங்க வேண்டும்.
அனைத்துத்துறை அதிகாரிகளும்...
ஆனந்தி(அ.தி.மு.க.):- சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்குவது இல்லை. இது குறித்து பல கூட்டங்களில் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பன்கூர் ஊராட்சியில் கூடுதலாக மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
நடராஜன்(அ.தி.மு.க.):- ஒன்றியக்குழு கூட்டம் நடைபெறும் போது அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும். நெப்பத்தூர், திருநகரி, முல்லையம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சேதம் அடைந்த மயான கொட்டகைகள், மயான பாதைகளை சீரமைத்து தர வேண்டும். திருவாலி ஏரியில் பாசன நீரை தடுக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்.
உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்
தொடர்ந்து அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் வழங்கக்கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் தமிழக அரசு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், தெய்வானை, சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.