கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளியின் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நத்தம் அருகே கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிப்பறைகளை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலர் நாசருதீனிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் பள்ளி கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வன், பள்ளி தலைமை ஆசிரியர் அழகுவை பணியிடை நீக்கம் செய்தார்.