லாரி சக்கரத்தில் சிக்கி கொத்தனார் பலி
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார், லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சீர்காழி:
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார், லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கொத்தனார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சுரேந்தர் (வயது 30). இவர் கொத்தனாராக பணியாற்றி வந்தார்.
நேற்றுமுன்தினம் சுரேந்தர் வழுதலைக்குடி கிராமத்தில் கொத்தனார் வேலை செய்துவிட்டு சம்பளம் வாங்குவதற்காக வடகால் கிராமம் நோக்கி சென்றார். அப்போது எடமணல் என்ற இடத்தில் சாலையில் உள்ள பாலத்தை அகலப்படுத்துவதற்காக கொட்டப்பட்ட ஜல்லி மீது சுரேந்தர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது.
உடல் நசுங்கி சாவு
இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் சுரேந்தர் விழுந்தார். அப்போது பின்புறம் வந்த லாரி எதிர்பாராதவிதமாக சுரேந்தர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுரேந்தர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் அசோக்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரேந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.