நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-10 18:45 GMT

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை பகுதியில் கிட்டப்பா பாலம் அருகில் கட்டப்படும் கருமாதி மண்டபத்தின் பணியை பாதியில் தடுத்து நிறுத்தி நகராட்சி இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியும், இதற்கு துணை போகும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன், நகர செயலாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

தள்ளு முள்ளு

இந்த போராட்டத்தின்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 150-க்கும் மேற்பட்டோர் திடீரென நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அதில் முக்கிய நிர்வாகிகளை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

இந்த போராட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்