விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்-217 பேர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 217 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 19:30 GMT

கூடலூர்

விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 217 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் முழுவதும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு செயலாளர் சி.கே. மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குஞ்சு முகமது வரவேற்றார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என். வாசு கண்டித்து பேசினார். நிர்வாகிகள் சுரேஷ், ஜோஸ், விஜயன், ரமேஷ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் எல்.ஐ.சி. அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.

217 பேர் கைது

இதைத்தொடர்ந்து கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலான போலீசார் கம்யூனிஸ்ட் கட்சியினரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஊட்டியில் ரெயில் மறியல் போராட்டம் நடந்த திட்டமிடப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் ெரயில் நிலையம் முன் தரையில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தாலுகா செயலாளர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், சி.ஐ.டி.யு., தலைவர் வினோத், குன்னூர் தாலூகா செயலாளர் இளங்கோ, கோத்தகிரி தாலூகா செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்படி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 80 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

பந்தலூர் தாலுகா எருமாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள வங்கியை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்