10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
அரக்கோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த சோகனூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக ராணிபேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா மற்றும் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் சோகனூர் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிறுமிக்கும் 31 வயதுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த நபருக்கும் மகேந்திரவாடி கோவிலில் திருமணம் நடைபெற இருந்ததும், அதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து மாணவிக்கு 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்யக்கூடாது, அப்படி செய்வது சட்டப்படி குற்றமாகும். சிறுமி தொடர்ந்து படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், மீறி சிறுமிக்கு திருமணம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.