மீன்கள் வாங்க ஆர்வம் இல்லாததால் வெறிச்சோடிய மார்க்கெட்

தஞ்சையில் புரட்டாசி மாதம் விரதம் முடிந்த நிலையில் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த விற்பனை கடைகளில் சூடுபிடித்த நிலையில் சில்லறை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

Update: 2023-10-18 20:20 GMT

தஞ்சையில் புரட்டாசி மாதம் விரதம் முடிந்த நிலையில் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. மொத்த விற்பனை கடைகளில் சூடுபிடித்த நிலையில் சில்லறை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

மீன்பிடி தடைகாலம்

புரட்டாசி மாதம் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவதால் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். இதனால் அந்த மாதம் முழுவதும் கோழி, ஆடு, மீன் இறைச்சிகள் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும். இந்த நிலையில் புரட்டாசி மாதம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து நேற்று ஐப்பசி மாதம் பிறந்தது. இதனால் இறைச்சி கடைகளில் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

தஞ்சையில் மொத்த மீன்மார்க்கெட் கீழவாசல் பகுதியிலும், சில்லறை மீன்கள் விற்பனை கொண்டிராஜபாளையம் பகுதியிலும் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மீன்கள் ஏலம்

குறிப்பாக நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது தவிர நண்டுகள் மேற்கு வங்காளத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். உள்நாட்டு மீன்கள் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தஞ்சைக்கு கொண்டுவரப்படும் மீன்கள் கீழவாசல் பகுதியில் ஏலமிடப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்கமாக ஒரு நாளைக்கு 20 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

வழக்கத்தை விட அதிகரிப்பு

நேற்று புரட்டாசி முடிந்த மறுநாள் என்பதால் 40 டன் அளவுக்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை நடைபெற்றது. சில்லறை வியாபாரிகளும் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

மீன்கள் விற்பனை குறைவாக இருந்தாலும் விலை அதிகரித்து காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்ட விலையை விட நேற்று கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்தாலும் விற்பனை இல்லை.

விலை விவரம்

தஞ்சை மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மீன்கள் கிலோ கணக்கில் விலை விவரம் வருமாறு:-

உயிர்கெண்டை ரூ.170, விறால் பெரியது ரூ.450, சிறியது ரூ.350, நண்டு ரூ.180 முதல் ரூ.280 வரை. சங்கரா பெரியது ரூ.250, சிறியது ரூ.150, கிளங்கா பெரியது ரூ.110, இறால் ரூ.220 முதல் ரூ.320 வரை., கொடுவா ரூ.280 முதல் ரூ.400 வரை. களவா ரூ.200, கணவா ரூ.150, ஐஸ் கெண்டை ரூ.130, குறவை ரூ.150 முதல் ரூ.250 வரை, வஞ்சிரம் ரூ.450 முதல் ரூ.600 வரை.

இது குறித்து மீன் மொத்த வியாபாரி நேதாஜி கூறுகையில், புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்விற்பனை அதிக அளவில் நடைபெறும் என எதிர்பர்க்கப்பட்டது. இதையடுத்து மொத்த கடைகளில் வியாபாரிகள் வந்து அதிக அளவில் வாங்கி சென்ற நிலையில் சில்லறை விற்பனை கடைகளில் வியாபாரம் இல்லை. மேலும் மீன் வழக்கத்தை விட நேற்று ரூ.50 முதல் ரூ.70 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. புரட்டாசி மாதம் முடிந்தாலும் நவராத்திரி கொலு, ஆயுதபூஜை போன்ற பண்டிகை வருவதால் மீன் வியாபாரம் நேற்று மந்தமாக காணப்பட்டது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்