விபத்தில் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் அருகே விபத்தில் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-21 18:45 GMT

திண்டுக்கல் அருகே பெரியகோட்டையை அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ் மோதியதில் முதியவர் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


இதையடுத்து காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரித்தனர். அதில் பழனிசாமியை போன்று, விபத்தில் இறந்தவரின் முகஅமைப்பு இருந்தது. இதனால் பழனிசாமியின் உறவினர்களிடம் உடலை காண்பித்தனர். அப்போது அவர் தான் பழனிசாமி எனக்கூறி உறவினர்கள் உடலை வாங்கி சென்று அடக்கம் செய்துவிட்டனர். அதன்பேரில் போலீசார் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த நிலையில் காணாமல் போன பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். ஆனால் பழனிசாமி இறந்துவிட்டதாக கூறி சோகத்தில் இருந்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். மேலும் விபத்தில் இறந்தவரை சரியாக அடையாளம் பார்க்காமல் விட்டதை நினைத்து வருந்தினர். இதுபற்றி திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை அறிந்த போலீசாரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடலை புதைத்து விட்டதால் போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. எனவே விபத்தில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பழனிசாமி குடும்பத்தினர் மட்டுமின்றி போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்