மார்த்தாண்டத்தில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

மார்த்தாண்டத்தில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-06 19:40 GMT

நாகர்கோவில், 

மார்த்தாண்டத்தில் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆபாச படம்

குமரி மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அதில், "தன்னை ஒருவர் ஆபாச படம் எடுத்து வைத்துள்ளார். அதை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்து இருக்கிறார். மேலும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

அதன்பேரில், அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசுக்கு, சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்தது நட்டாலம் சரல்விளையை சேர்ந்த ஜாண் கென்னடி (வயது 40) என்பதும், மேலும் அவர் அந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்துவைத்துக் கொண்டு அந்த வீடியோவை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் ஜாண் கென்னடியின் தொல்லை தாங்காமல் அந்த பெண் தனது செல்போன் எண்ணை மாற்றியதாகவும் கூறப்படுகிறது. அப்படியும் அந்த இளம்பெண் பயன்படுத்திய புதிய செல்போன் எண்ணையும் ஜாண் கென்னடி எப்படியோ தெரிந்து கொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜாண் கென்னடியை போலீசார் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்